கரோனா வைரசின் கோரத் தாண்டவம்!
‘சந்தடி சாக்கில் கந்தப் பொடித் தூவுதல்’ என்ற பழமொழியும், ‘ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண்ணாயிருப்பது’ என்ற முதுமொழியும் நாட்டு மக்கள் அறிந்த ஒன்று.
ஏற்கெனவே ‘விடுதலை’ தலையங்கம் ஒன்றில், ‘வீடு பற்றி எரியும்போது, சுருட் டுக்கு நெருப்புக் கேட்கும் (ஈனச்) செயல்’ என்ற பழமொழியையும் நினைவூட்டியிருந் தோம்!
கரோனா என்ற கொடூரம் உலகையே ஆட்டிப் படைக்கிறது. 199 நாடுகளில் அதன் கோரத் தொற்றுத் தாண்டவம் குறைந்த பாடில்லை.
எல்லா மதக் கடவுளரும் (அப்படி ஒருவர் இருந்தால்) கரோனாவுக்கு அஞ்சி அவரவர் கூடாரத்தை மூடச் சொல்லி, அந்தந்த மத பக்தர்களிடம் கூறி யிருக்கிறார்கள் போலும்!
கரோனாவை ஒழிக்கச்
சிறப்பு பூஜையா?
சர்வசக்தி, சர்வ வியாபி, சர்வ தயாபரன் என்று கடவுளுக்குச் சொல்லப்படும் மனிதனுக்கு மேற்பட்ட சக்திகள் கற்பனை என்பதும், கடவுள்களும், கோவில்களும், மசூதிகளும், மாதா கோவில்களும்கூட சமூகப் பரவலால் கரோனா தொற்று ஏற்படுகிறது என்பதால், மூடப்பட்டுள்ள நிலையில்,
இங்குள்ள தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை, அதன் நோக்கம் வெறும் தணிக்கை (Audit) செய்வதுதான் என்று சட்டத்தின் கர்த்தாக்கள் கூறியதையே புறந்தள்ளிவிட்டு, மதச்சார்பற்ற அரசு என்று பிரகடனப்படுத்தப்பட்ட அரசமைப் புச் சட்டப்படி நடக்கவேண்டிய அரசின் துறை, கரோனாவை ஒழிக்க சிறப்பு பூஜை நடத்த ஆணை பிறப்பித்திருப்பதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி உண்மை தான் என்றால், வன்மையாகக் கண்டிக் கின்றோம். பார்ப்பனர்களுக்கு வருமானத் திற்கு வழி என்பதைத் தவிர, மூடநம் பிக்கைகளைப் பரப்பும் முட்டாள்தனக் கேலிக் கூத்தின் வெளிச்சம் இது என்பதைத் தவிர வேறு என்ன?
மக்கள் வரிப் பணம் அல்லவா அரசுத் துறைமூலம் செலவழிக்கப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு ஓர் இளங்குழந்தை எழுதிய கடிதம்!
பிரதமர் மோடிக்கு ஓர் இளங்குழந்தை எழுதிய கடிதத்தில், ‘‘கரோனா தடுப்பு நிதிக்கு மத அறக்கட்டளைகள் (கோவில் வருமானங்களிலிருந்து) வரும் வருவாயில் 80 விழுக்காடு எடுத்துக்கொண்டு மருத்து வக் கருவிகள், மருத்துவமனைகள் கட்டப் பயன்படுத்துங்கள்” என்று கேட்கும்போது, இப்படி ஒரு பார்ப்பனப் புதுச் சுரண்டலா – யாகம் என்பதன்மூலம்?
யாகத்தினால் குணப்படுத்த முடியும் என்றால், நிரூபிக்கட்டும். மருத்துவம னைக்குப் போகாமலேயே வெறும் மந்திர உச்சாடனம்மூலம், பிரசாதம்மூலம் குணப் படுத்திடலாம் என்றால், உலகம் நம்மைப் பார்த்து எப்படிச் சிரிக்கும்? யோசனை வேண்டாமா?
அரசமைப்புச் சட்டத்தின்
51-ஏ(எச்) பிரிவு
‘‘அறிவியல் மனப்பான்மையை ஒவ் வொரு குடிமகனுக்கும் பரப்பவேண்டியது அடிப்படைக் கடமை” என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவை இப்படித்தான் மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதா?
மதத் தலைவர்களை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சாமியார்களை அழைத்துப் பிரதமர் மோடி கலப்பதற்கு முன்னே, விஞ்ஞானி களோடு காணொலிமூலமாவது யோசனை கேட்டிருந்தால், பாராட்டலாம்.
இறைவனின் திருவிளையாடலாம் – கர்ம வினைப் பயனாம்!
இங்குள்ள அதிபுத்திசாலி அமைச்சர் ஒருவர், ‘இறைவனின் திருவிளையாடல்’ என்று ஊதுகிறார். இது சரி என்றால், மத்திய – மாநில அரசுகளும், பிரதமரும், முதல மைச்சரும் கரோனா ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது கடவுள் விரோதச் செயல் அல்லவா!
புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநர் ஓர் அய்.பி.எஸ்., ‘கர்மவினைப் பயன்’ என்று கூறி, தனது அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார்.
‘கர்ம வினைப்பயன்’ என்று கைகட்டி, வாய் பொத்தி இருக்கச் சொல்லுவது ஒன்றே போதும் அல்லவா? இதைவிட பொறுப்பற்ற பேச்சுகள் வேறு உண்டா?
இன்னும் சிலர், ‘‘கோதுமை மாவு அகல் விளக்கு ஏற்றினால், அந்த வெளிச்சத்தில் கரோனா வைரஸ் சாவும்” என்றும், மற்ற சிலர், ‘‘பசுமாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா கிருமிகள் சாகும்” என்றும் சொல்கின்றனர்.
பிரபல இந்தி நடிகரின் உளறல்!
பிரபல இந்தி நடிகர் ஒருவர், பிரதமர் கூறியதுபோல், ஓங்கிக் கைதட்டினால், ‘‘அமாவாசையில், மணியடித்தால் கரோனா வைரஸ் ஓடிவிடும்” என்று உளறிக் கொட்டி, நாடே நகைத்தபின், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார். ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒரு நாள்தான் முட்டாள்தினம்; இதுபோன்ற முட்டாள்தனம் வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்!
தடுப்பு முறையும் – அறிவியலுமே
உலகைக் காக்கும்!
இப்போது அவசரத் தேவை தனிமைப் படுத்திக் கொள்ளல், அடிக்கடி சோப்புப் போட்டு கைகளை பலமுறை கழுவுதல், ஒரு மீட்டர் தூரம் இடைவெளி – தும்மல், இருமல் வந்தால், கைக்குட்டையை வைத்து மற்றவர்மீது பரவாமல் தடுத்தல், அறிகுறி சந்தேகம் வந்தால், தனிமையைத் தாண்டி, மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளல் போன்ற எல்லா முறைகளையும் தாண்டி, ‘‘மூடநம்பிக்கை வைரஸ்” நம் மூளைக்குள் புகுந்து, நிரந்தர மூளை கெட்ட முட்டாள்தனத்தின் மூலதனமாக்கிவிடக் கூடாது, எச்சரிக்கை!
அறிவியல்படி நடந்துகொள்ளவேண் டும் என்று ஒரு பக்கத்தில் அரசே அறிவித்துக்கொண்டு இருக்கையில், இன்னொரு பக்கத்தில் மூடத்தனத்தின்பக்கம் ஓர் அரசுத் துறையே, மக்களை இழுத்துச் செல்லுவது அரசுக்கு எதிரான – ஆபத்தான நடவடிக்கை அல்லவா! யாகம்தான் நடக் கிறதே, நாம் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஊட்டலாமா? உடனே இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்!
தடுப்பு முறையும், அறிவியலும் அதன் வெற்றியுமே உலகைக் காக்கும் என்பது அனுபவப் பாடம்!!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.4.2020